தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்

1
Share

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கவலைப்படும் ஒரு விஷயம் தொப்பை. பலர் தொப்பையை குறைக்க உடற்பயிற்சி மையத்திற்கு சென்றும், நடை பயிற்சி செய்தும் வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு எந்த விதமான பயனும் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் உடற்பயிற்சிக்கு ஏற்ப சரியான உணவு முறை பின்பற்றாததே.நமது  உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை மற்றும் உடற்பயிற்சி குறைவாக இருத்தல் மூலம் மட்டுமே எடை அதிகரிப்பு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்படுகின்றன. இந்தக் கட்டுரையில் இவ்வாறு ஏற்படும் தொப்பையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் எவை என்பதைப் பார்ப்போம்.

மசாலா உணவுகள் வேண்டாம்

முதலாவதாக கடைகளில் செயற்கை மசாலா மற்றும் நிறமிகளை வைத்து செய்த உணவு வகைகளை பெரும்பாலும் தவிர்க்கவேண்டும். உணவில் எப்போதும் எண்ணெய் அளவு குறைவாக பயன் படுத்த வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேருவதை தவிர்க்கலாம்.

அதிகமான தண்ணீர்

நமது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே பிரதானமானது. தாகத்திற்கு மட்டும் தண்ணீர் அருந்தாமல் நமது உடலிற்கு தகுந்தாற்போல் தண்ணீர் பருகவேண்டும். அதிகமான  தண்ணீர் குடிப்பதால்  உடல் வறட்சியையும், உடலில் உள்ள  நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், உடல் எடை குறையவும் உதவுகிறது.

சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைத்தல்

கெமிக்கல்  கலந்து   தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைகள் நம் உணவில் அதிகமாக சேர்க்கும்போது நமது உடலின் சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு தேவையற்ற நச்சுக்கள் உடலில் கலந்து நமது செரிமான உறுப்புகளைச் சேதமாக்கி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகிக்கிறது. அதற்கு பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவில் உப்பு இன்றியமையாதது. அதிகமான உப்பு சேர்க்கும் பொது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேற்றத்தைத் தடுத்து உடல் எடை கூட வழி வகுக்குகிறது . அளவாக உப்பு சேர்த்து சமைத்தல் உடலுக்கு நன்மை பயக்க கூடியது. முடிந்த வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் கல் உப்பினை உபயோகிப்பது மிகவும் நன்று.

சரியான தூக்கம்

நாம் அன்றாடம் செய்து முடிக்கும் வேலைக்கு ஏற்ப நம் உடலுக்கு ஓய்வும், நல்ல ஆழ்ந்த தூக்கமும் தேவை படுகிறது. குறைந்தது 7 முதல் 8 மணிவரை நன்றாக  உறங்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதை அதிகரிக்கும். சரியாக உறங்குவதால் ஜீரண சக்தி அதிகமாவதோடு, காலையில் எழுந்தவுடன் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

ஆரோக்கியமான சத்தான உணவுகள்

உலகம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ,அயராது பாடுபடும் நமக்கு  ஊட்டச்சத்து மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது . தற்போது கடைகளில் கிடைக்கும் மேற்கத்திய உணவு பொருட்களை விட இயற்கையான முறையில் கிடைக்கும் உணவுகளில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. பழங்கள், காய்கறிகள், கீரைகளில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்ததாக  உள்ளது. தினமும் சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். ஒரு நாளைக்கு மூன்று வேலைகளிலும் முழுமையாக சாப்பிடாமல், சிறிது சிறிதாக ஆறு வேலை உணவு உட்கொண்டால் எளிதில் ஜீரணமடைந்து நமக்கு வேண்டிய ஊட்டசத்து முழுமையாக கிடைக்கும். இரவில் குறைவாகவும், காலையில் அதிகமாகவும் சாப்பிட வேண்டும். நாம் நாள் முழுவதும் செய்யும் வேலைக்கு காலை உணவே நமக்கு உத்வேகத்தை கொடுக்க கூடியது,  ஆகவே காலை உணவை எப்பொழுதும் தவிர்க்க கூடாது.

உடற்பயிற்சி

நம் உடலுக்கு உடற்பயிற்சி இன்றியமையாதது. தினமும் நடைப்பயிற்சியோ, சைக்கிள் ஓட்டுவதோ அல்லது உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடற்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு மிகவும் தேவையான இயக்கங்களைக் எளிதில் கொடுத்து விடலாம். உடலிலுள்ள கெட்ட கொழுப்பு வியர்வையின் மூலம் வெளியேறி புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் யோகா, மூச்சி பயிற்சியின் மூலம் மேலும் நம் உடலுக்கு வலிமை சேர்க்கலாம். வெறும் உடற்பயிற்சி மட்டும் மேற்கொண்டு, உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் முறையாக கடைபிடிக்காவிட்டால் எந்த பலனும் இல்லை. மேலே குறிப்பிட்ட அணைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அதனுடன் நீங்கள் தினமும் எடுத்து கொள்ளும் உணவுகளுக்கு தகுந்தாற்போல் உடற்பயிற்சி மேற்கொண்டால் நிச்சயமாக உடல் எடை மற்றும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here