இதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்

1
Share

மனித உடலில் மனிதன் உயிர்வாழ இன்றியமையாத உறுப்பு இதயம். இதயம் இல்லையேல் இயக்கம் இல்லை. எனவே இதயத்தை பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியம். மனிதன் இன்றைய வேகமான சூழலில் எல்லாவற்றையும் அவசர அவசரமாக செய்ய இருப்பதால், அவசியமான வகைகளை காக்க தவறிவிடுகிறான். மேலும் நம் இதயமானது தன்னலமின்றி இடைவிடாது, துடித்துக் கொண்டு தனக்குள்ள இயக்கத்தை சரிவர செய்ய முடியாத போது, ஒருசில அறிகுறிகளை நமக்குத் தெரியப் படுத்தும். அப்போதும் நாம் அதைக் கண்டுகொள்ளாமல் அவசரமாக ஓடிக் கொண்டுதான் இருப்போம். திடீரென ஒரு சமயத்தில் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தும் போது எல்லாம் நின்றுவிடும். இதயத்தை பாதுகாக்க சக்தி வாய்ந்த சாதாரணமான எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் இதய ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இரத்த அழுத்தம் 

உடலின் ரத்த அழுத்தம் இதயத்தின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இரத்த கொதிப்பு அல்லது உயர் ரத்த அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்டால் இதை தொடர்ந்து வரும் பல வியாதிகளை நாம் தடுத்து விடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொதிப்பினால் தான் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகின்றன. வரி ஏற்படும் ரத்தக் கொதிப்பை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறையிலேயே சரி செய்து விடலாம். ஆகவே நாம் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கீரை ,மீன் மற்றும் தயிர் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் இவற்றை உண்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

உணவு முறைகள்

  • கால்சியம் வாதத்தை தடுக்கும். ஆகவே பால் ,பாலாடைக்கட்டி, கொட்டை வகைகள் ஆகியவற்றை தினம்தோறும் சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சமையலில் தினமும் ஏதேனும் ஒரு வகையில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
  • கீரை வகைகளில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, புதினா மற்றும் பசலைக் கீரைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பீட்டா கரோடின் சத்துள்ள கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முட்டைக்கோஸ், ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சோயா பால், சோயா மொச்சைபோன்றவை உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.
  • சுண்டைக்காய், கொத்தமல்லி கீரை துவையல் ,கொள்ளு, பீன்ஸ், டபுள் பீன்ஸ், பச்சை பட்டாணி, கேழ்வரகு போன்றவை எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுத்து ஜீரண மண்டலத்தை பாதுகாக்கிறது.
  • உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். ஆகவே அப்பளம், சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • மூன்று வேளை உணவு உட்கொள்வதை தவிர்த்து, நான்கு அல்லது ஐந்து முறையாக பிரித்து அளவாக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். காபியை தவிர்த்து தேனநீர் பருகலாம்.
  • முதியவர்கள் இரவு நேரங்களில் மாதுளம் பழம் அல்லது கருப்பு திராட்சை உண்ணலாம். மாதுளம் பழத்தில் உள்ள எல்லா சிக்கென்ற அமிலம் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

உடற்பயிற்சி

தினமும் இருவேளை 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, மூச்சு பயிற்சி இவையிரண்டும் எளிமையாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்.மேலும் லிப்ட் பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் நடப்பது, நல்ல பயிற்சியாகும். மாடிப்படி ஏறி இறங்குவது, இதயத்திற்கு அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும். மன இறுக்கம் ,வெறுப்பு, தனிமை உணர்வு போன்றவை வராமல் இருக்க மூச்சுப் பயிற்சி தியானம் யோகா போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள். தினமும் போதுமான அளவு நேரம் தூங்குங்கள். குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

பரிசோதனை

நம் உடலின் ரத்த அழுத்தம் கொலஸ்ட்ராலின் அளவை மாதம் ஒரு முறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உடல் உபாதைகளுக்கு நாமாகவே மருந்து மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மருந்துகள் உட்கொள்வது நல்லது.  இதற்கென நேரம் ஒதுக்குவதில் தயக்கம் காட்டாதீர்கள்.

மகிழ்ச்சியாக இருங்கள்

உடல், மனம், இதயம் ஆகியவற்றில் இயக்கங்களை போக்க மனம் விட்டு சிரியுங்கள். இரவு உறங்குவதற்கு முன் நகைச்சுவை சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். சந்தோஷமாக இருப்பது இதயத்தை பலப்படுத்த உதவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here