கொரோனா விழிப்புணர்வு கவிதைகள்

0
Share

கடவுள் கண்டோம் !

மருந்து ஏதும் இல்லை
என்ற மமதையில் திரியாதே !
மடியும் வரை மக்களைக் காக்க
மருத்துவர்கள் உண்டு மறவாதே !
கடுமையான கட்டுப்பாடுகளைத் தாண்டி
கரம் பற்றிக் கொள்ள நினைக்காதே !
கடுகளவும் கண்ணிமைக்காமல்
காவல் காக்க காவலர்கள் உண்டு நெருங்காதே !
எவர் கண்ணுக்கும் தெரியாமல்
ஊரெங்கும் சுற்றித் திரியலாம் என எண்ணாதே !
தூய்மை காக்க துப்புரவாளர்
துடைத்தெறிந்து விடுவார், திரியாதே !
நீ ஆயிரம் துன்பங்கள் தந்தாலும்,
உன்னை அழித்து, எங்களைக் காத்து,
நல்லுலகம் படைக்க மும்மூர்த்திகள்
கண்டோம் கலியுகத்தில் !

…………………………………………

அயல்நாடுகளுக்கு ஆட்டம் காட்டி விட்டு
அழையா விருந்தாளியாய் என்
அன்னை பூமிக்குள்
அடியெடுத்து வந்த கொரோனாவே !
அந்நியனைப் போல அசுத்தத்திற்கு
அகால மரணத்தை தண்டனையாக தந்து
அச்சுறுத்துகிறாயே!
பச்சிளம் குழந்தை முதல் பிரதமர் வரை
பாகுபாடில்லாமல் பற்றிக் கொள்கிறாய்..
உன்னால் முழு அடைப்பு என
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் எங்களுக்கு
உணவு பற்றாக்குறை, பள்ளி, கல்லூரிகள் அடைப்பு ,
தொழில் துறையில் சரிவு, விவசாயத்தில் வீழ்ச்சி என
எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது
எனினும் நீ ஓய்ந்தபாடில்லை..
உன்னால் சிலகாலம்
குடும்பம், அன்பு, தூய்மை, இயற்கை உணவு
என எல்லாவற்றையும்
எங்களால் அனுபவிக்க முடிந்தது
எனினும் அடங்கவில்லை உன் ஆணவம் !
இவற்றை எல்லாம் எங்களுக்கு உணர்த்திய உனக்கு
யார் உணர்த்த வேண்டும் என்று காத்திருக்கிறாய்
எங்கள் பாரத தாயின் பொறுமையை!
ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திற்கு பிறகு
இன்று உன்னால் அமைதி காக்கிறோம்.
நினைவில் கொள்
கத்தியின்றி, ரத்தமின்றி
அகிம்சையால் உன்னையும் வெல்வோம்!
விரைவில் கொலைகார கொரோனா
கொல்லைப்புறமாக ஓடியது என்ற
கொச்சை மொழிக்கு ஆளாகப் போகிறாய் !

-காயத்ரி நிமலன், கோவை.

…………………………………………

பஞ்சபூதங்கள் பயமுறுத்தியும்
மனிதன் பயமே இல்லாமல் வீனில் பலியாகினான்..
பார்த்ததை எல்லாம் தனதாக்கிய மனிதன்
இயற்கை பரிசளித்த நோய்களை
பரிதாபமாக பெற்று சகித்தான்..
பல முகம் கொண்டு
கொல்ல வந்தான் கொரானா !
பாரினில் மனிதன்
இனியாவது திருந்துவானா ?

-கவிமோகனம், கோவை.

…………………………………………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here