A.R.ரஹ்மான் என்னும் இசை ராட்சஷன்

0
Share

என் சிறுவயதில் தூர்தர்ஷனில் வரும் சித்ராஹார், ரங்கோலி, ஒளியும் ஒலியும் போன்றவற்றை பார்க்கும் போது இந்தி பட பாடல்கள் மொழி புரியாவிட்டாலும் கேட்க பிடித்திருந்தது. இது போல தமிழ் பட பாடல் இல்லையே என நினைத்த என் நினைப்பை மாற்றியது ” ரோஜா” திரைப்படம். அது வரை தமிழ் சினிமா அப்படி ஒரு இசையை கேட்டதில்லை. ஆடியோ கேசட்டிலிலேயே அவ்வளவு துல்லியம் ஒலியில். வெள்ளை மழை பாடலின் முதலில் வரும் சத்தத்தின் போது தங்கள் வீட்டு கண்ணாடி பாட்டில் உடைந்துவிட்டதோ என எண்ணி ஒடி வந்து பார்த்தவர்களுக்கு தெரியும், அதன் தரம். அதுதான் இசை புயல் A.R.ரஹ்மான்.

இந்தி பாடலின் தரம் இப்போது தமிழிலும். மானே..தேனே..ராசா..என்று பாடல்களில் வார்த்தைகளை நிரப்பிய இசையமைப்பாளர்கள் மத்தியில் புதிய வார்த்தைகள், புதிய இசை என தமிழ் திரைஇசையை உயர்த்தியவர் அவர். இவர்களுக்கு இது போதும் என்று இசை அமைத்தவர்களை, மக்கள் போதும் என்று வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். பாடகர்களின் பெயர்களும், இசைகருவிகள் வாசிப்பவர்களின் பெயர்களும் ஆடியோ கேசட்டில் இடம் பெற்றது ரஹ்மானால்தான்.

என் இளமை காலம் முதல் இன்று வரை..என் சோகம், சந்தோஷம், வலி, இதை எல்லாம் அவரின் இசையால்தான் கடந்திருக்கிறேன். காலை அலாரம் டோனே அவரின் குரலில் ஒலிக்கும் “நெஞ்சே எழு” தான். “ஆரோமலே” வையும் “தள்ளிப்போகாதே” வையும் கேட்காமல் தூங்கிய இரவுகளை எளிதில் எண்ணிவிடலாம்.அந்த இசைதான் மஞ்சள் காமாலை வந்து படுத்த போதும்.”ஜீன்ஸ்” ஐ பார்க்க தியேட்டருக்கு அழைத்தது. அடுத்த நாள் எடுத்து விடுவார்கள் என அடித்து பிடித்து “கன்னத்தில் முத்தமிட்டால்” பார்க்க தூண்டியது. வீட்டில் அடுத்த நாள் விசேஷம் இருக்கும்போதும் “வின்னைத்தாண்டி வருவாயா” பார்க்க வைத்தது.

மற்றவர்கள் கிரிக்கெட் ஸ்கோரிர்காக அடிக்கடி நியூஸ் பார்ப்பது போல, நானும் பார்த்தேன் பிப்ரவரி 2009 ல்..ஆம் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய தருணம்தான் அது. அதுவும் 2.. நானே ஆஸ்கர் வாங்கியது போல மகிழ்ந்தேன். கல்யாண கோட் சூட் பாக்கெட்டில் என்ன வைத்திருப்பார்கள்?..கர்சீப்..கொஞ்சம் பணம். நான் வைத்திருந்தது ரஹ்மானின் பட பாடல் லிஸ்ட். கல்யாண சீடியில் சேர்ப்பதற்காக வீடியோ கிராபரிடம் கொடுப்பதற்கு. யார் யாருக்கு பத்திரிகை தர வேண்டும் என்கிற லிஸ்டிற்கு கூட நான் அவ்வளவு கஷ்டப்படவில்லை. அப்படி அவர் பாடலில் எதை விட மனசு வரும். அப்படி என வாழ்வோடு பின்னி பினைந்தது ரஹ்மானின் இசை. ஒரு இசைஅமைப்பாளர் இத்தனை வருடங்கள், இவ்வளவு பேரையும் புதுமையான இசையால் வசீகரிக்க முடிகிறது என்றால் அது எத்தனை ஆஸ்கருக்கு சமம். ரஹ்மானுக்கு வயது ஆகலாம். ஆனால் அவரின் இசைக்கு வயதே இல்லை. அவரது இசை 90 களில் இருந்தது போல் இப்போது இல்லை என்பவர்கள், 90 களிலேயே தங்கிவிட்டவர்கள். ரஹ்மானின் இசை தமிழ்திரை உலகை மாற்றியது. இந்திய திரை உலகை ஹாலிவுட்டிற்கு ஏற்றியது. இதுதான் நிஜம்.

– செந்தில்குமார், கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here